புதுடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்த சந்திப்பின் போது தொகுதிப் பங்கீடு குறித்து தாங்கள் விவாதிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.

மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்பாடுகள் மற்றும் வரும் தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்துவதற்கான ஆக்கப்பூர்வமான உத்திகள் குறித்தே முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தங்களது கூட்டணி மிகவும் வலிமையானது என்றும், திமுக எனும் ‘துரியோதன’ கூட்டணையை வீழ்த்தப் போகும் ‘பஞ்ச பாண்டவர்’ கூட்டணி இது என்றும் அவர் வர்ணித்தார்.

மேலும், டெல்லிக்கு தாங்கள் வருகை தருவதைக் கண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுவதாகக் குறிப்பிட்ட தினகரன், கடந்த 12 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு சுமார் 12 லட்சம் கோடி ரூபாயை வழங்கியுள்ளதாகக் கூறினார்.

இதனால் சசிகலாவைத் தற்போதைய கூட்டணியில் சேர்க்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய அவர், பீகார் மாநிலத்தைப் போலவே தமிழகத்திலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலையிலும் தொண்டர்கள் ஒற்றுமையுடன் பணியாற்றி வெற்றியை உறுதி செய்வார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். திமுகவிற்கு உண்மையான மாற்றாகத் திகழ்வது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டுமே என்றும் அவர் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.