தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவி வரும் இழுபறியால், தமிழக வாழ்வுரிமை கட்சி (தவாக) கூட்டணியிலிருந்து வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், இந்த முறை 2 தொகுதிகளைக் கோரியுள்ளார்.

இருப்பினும், தி.மு.க. தரப்பில் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாலும், பேச்சுவார்த்தைக்கு இதுவரை முறையாக அழைக்கப்படாததாலும் அக்கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய வேல்முருகன், தி.மு.க-விற்கு ஒரு நாள் கெடு விதித்துள்ளார். இன்று சனிக்கிழமைக்குள் தொகுதிப் பங்கீடு குறித்து சுமுகமான முடிவு எட்டப்படாவிட்டால் அல்லது பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரவில்லை என்றால், நாளை ஞாயிற்றுக்கிழமை முறைப்படி கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவிக்க முடிவு செய்துள்ளார்.