தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தது குறித்துப் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார்.
“மத்திய அமைச்சர்கள் அமித் ஷா அல்லது பியூஷ் கோயல் போன்றவர்கள் ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வர முடியுமா? அவர்களின் பணிச்சுமை காரணமாக, தமிழகத் தலைவர்கள் டெல்லி சென்று ஆலோசனை நடத்துவதில் தவறில்லை” என்று அவர் தெரிவித்தார். தொகுதிப் பங்கீடு தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்காகவே ஈபிஎஸ் டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்ததாகக் குறிப்பிட்ட டிடிவி தினகரன், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கிடையே சுமூகமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
என்.டி.ஏ கூட்டணியின் தமிழகத் தலைவர்கள் அடிக்கடி டெல்லி செல்வது ஏன் என்ற கேள்விக்கு, “முக்கியமான நேரங்களில் மேலிடத்துடன் நேரடியாகப் பேசுவதுதான் முறை” என்றும், இது கூட்டணி வலிமையையேக் காட்டுகிறது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். டிடிவி தினகரனின் இந்த விளக்கம் அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
