தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் குறித்து, திமுகவில் இணைந்துள்ள பிக் பாஸ் பிரபலம் ஜூலி தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருவது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விஜயைக் குறிவைத்து அவர் வெளியிட்ட புதிய வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சமீபத்தில் ஜூலி வெளியிட்ட வீடியோவில் பேசியதாவது, “தனிப்பட்ட நபர் எவரையும் தாக்கக்கூடாது என்று எங்கள் தலைவர் (திமுக) அறிவுறுத்தியுள்ளார். எனவே நான் யாரையும் பர்சனலாகத் தாக்க மாட்டேன். ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்துப் பேச எனக்கு உரிமை உள்ளதா எனப் பலரும் கேட்பதால், இனி அதைப் பற்றிப் பேசப்போவதில்லை. திமுக அரசின் சாதனைகளைப் பற்றி மட்டுமே பேசுவேன்.
இவ்வாறு ஆரம்பித்து பேசிய ஜூலி, திடீரென விஜயை நேரடியாக விமர்சித்தார். “பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு தஞ்சாவூரில் கத்தினால் விவசாயம் வந்துவிடுமா? விஜய்க்குத் தெரிந்தது ஷூட்டிங் மட்டும்தான். அந்த ஷூட்டிங்கிற்காக 50 பேரைக் கொன்றுவிட்டார்” எனத் தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஜூலியின் இந்தக் கருத்துக்குச் சின்னத்திரை நடிகர் அருண் ராஜா சமூக வலைதளப் பதிவு மூலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில்:
“உங்களைப் பற்றிப் பேசக்கூடாது என்றுதான் நினைத்தேன். ஆனால் தொடர்ந்து வதந்திகளைப் பரப்பி வருகிறீர்கள். உங்கள் தலைவர் சொன்னது போல தனிநபர் தாக்குதல் நடத்தாமல், உங்கள் கட்சி செய்த சாதனைகளைப் பற்றி மட்டும் பேசுங்கள். அதை விடுத்து ஆதாரமற்றக் கட்டுக்கதைகளைப் பேசாதீர்கள்,” என நேரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்தே, ஜூலி அவரைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். குறிப்பாக அவர் திமுகவில் இணைந்த பிறகு, தவெக கட்சியின் கொள்கைகள் மற்றும் விஜயின் பேச்சுகள் குறித்துக் காரசாரமான கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்.
ஜூலியின் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் அவருக்கு எதிராகக் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர். “அரசியல் நாகரிகம் இல்லாமல் அவதூறுகளைப் பரப்ப வேண்டாம்” எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம், அரசியல் கருத்துச் சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு என ஒரு தரப்பினர் ஜூலிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தமிழக அரசியலில் தவெக – திமுக இடையே மறைமுகப் போர் நிலவி வரும் சூழலில், சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்களுக்கு இடையிலான இந்த மோதல் தற்போதைய ‘ஹாட் டாபிக்’ ஆக மாறியுள்ளது.
