நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் பிளேயிங் 11 மற்றும் வீரர்களின் ஃபார்ம் குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா தவிர மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களின் எகானமி 10-க்கும் அதிகமாக இருந்தது. அதேபோல், நடப்புத் தொடரில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவு அமையவில்லை. இதனால் இறுதிப் போட்டியில் அவர் நீக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: “ஒரு வீரரின் தற்போதைய ஃபார்ம் குறித்து கவலைப்படத் தேவையில்லை. கிரிக்கெட் என்பது ஒரு கூட்டு முயற்சி. நாங்கள் ஒட்டுமொத்த அணியின் செயல்பாட்டில்தான் கவனம் செலுத்துகிறோம். வெற்றி அல்லது தோல்வியின் போது ஒரு தனி நபரின் செயல்பாட்டை மட்டும் வைத்து நாங்கள் முடிவு எடுப்பதில்லை. அணியில் உள்ள 11 வீரர்களும் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாகச் செயல்பட முடியாது. ஒரு சிலருக்கு சரிவு ஏற்படும் போது, மற்ற வீரர்கள் அதைச் சரிசெய்ய முயற்சிப்பார்கள்.”

“வருண் சக்ரவர்த்தி குறித்து எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. அவர் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர். எதிரணிக்கு எதிராக எப்போது, எப்படி பந்துவீச வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். சரிவிலிருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்ற வித்தையும் அவருக்குத் தெரியும். அவர் நிச்சயம் மீண்டு வருவார் என நான் நம்புகிறேன். பிளேயிங் 11 மாற்றங்கள் குறித்து இப்போதே கூற முடியாது, நாளை களத்தில் அதை நீங்கள் பார்க்கலாம் என்றார்.

மேலும் உலகக் கோப்பைக்கு முன்பே நாங்கள் நியூசிலாந்துடன் தொடரில் விளையாடினோம். அவர்கள் இந்தத் தொடரிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். நாங்களும் அதே வேகத்தில் இருக்கிறோம். எனவே, இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை,” என சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.