ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் மகுடம் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணியை நியூசிலாந்து எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
இறுதிப்போட்டிக்கு முந்தைய நாள் இரவு, நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தனது நாட்டு ரசிகர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: “இந்திய மண்ணில் விளையாடுவது என்பது மிகப்பெரிய அழுத்தத்தைத் தரக்கூடியது. எங்களுக்கு எதிராக 140 கோடி இந்திய ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். சுமார் 1.30 லட்சம் பேர் அமரக்கூடிய உலகின் மிகப்பெரிய மைதானத்தில், பெரும்பான்மையான ரசிகர்கள் இந்திய அணிக்காகவே குரல் கொடுப்பார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.
A message to Aotearoa from captain Mitchell Santner ✉️ pic.twitter.com/znAGHC4bNd
— BLACKCAPS (@BLACKCAPS) March 7, 2026
நியூசிலாந்து நாட்டில் இந்தப் போட்டி திங்கட்கிழமை அதிகாலை 2.30 மணிக்குத் தொடங்குகிறது. இது குறித்து சாண்ட்னர் கூறுகையில், “அவ்வளவு அதிகாலையில் எழுந்து போட்டியைப் பார்ப்பது கடினம் தான். இருப்பினும், தயவுசெய்து அலாரம் வைத்து எழுந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள். நீங்கள் சமூக வலைதளங்களில் பகிரும் பதிவுகளும், புகைப்படங்களும் எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தைத் தருகின்றன” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் நகைச்சுவையாக அவர் கூறுகையில், “திங்கட்கிழமை காலை இந்தப் போட்டியைப் பார்ப்பதால் பள்ளி அல்லது அலுவலகத்திற்குச் செல்ல தாமதமானால், நான் எழுதிய இந்தக் கடிதத்தை உங்கள் ஆசிரியர் அல்லது மேலாளரிடம் காட்டுங்கள். உங்களின் ஆதரவுதான் மைதானத்தில் எங்களுக்குப் போராடும் வலிமையைத் தருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் அணி முழுத் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்த சாண்ட்னர், “நாங்கள் விரைவில் நாடு திரும்புவோம். அப்படித் திரும்பும்போது கையில் ஒரு ‘கூடுதல் சுமையுடன்’ (உலகக்கோப்பை டிராபி) வருவோம் என உறுதி அளிக்கிறேன்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் சொந்த மண்ணில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் வேளையில், சாண்ட்னரின் இந்த உருக்கமான பதிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
