தமிழகத்தில் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் குறிப்பாக மகளிர் உரிமை தொகை உட்பட பல நல்ல திட்டங்களும் கிடைக்கிறது. அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தாயுமானவர் என்ற திட்டத்தை சமீபத்தில் தொடங்கி வைத்ததோடு வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோரும், மாற்றுத் திறனாளிகளும் வீட்டிலேயே ரேஷன் பொருட்களை பெறும் சேவையைப் பெறுகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில், இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு தேடி குடிமைப் பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டம் குறித்த தகவல், அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் அறிந்துக்கொள்ளும் வகையில் தகவல் பலகையில் தெளிவாக எழுதப்பட்டு இருக்க வேண்டும் எனவும், திட்டத்தின் பயனாளிகள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
