தமிழகத்தில் முந்தைய கல்வியாண்டுகளில் ப்ளஸ் 1 தேர்வு எழுதி, தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அவர்கள் தேர்ச்சி பெறும் வரை மீண்டும் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநிலக் கல்விக் கொள்கையின் படி, நடப்பாண்டு முதல் ப்ளஸ் 1 தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இதனால், தற்போதைய கல்வியாண்டு மாணவர்கள் நேரடியாக ப்ளஸ் 2க்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது.
ஆனால், முந்தைய ஆண்டுகளில் ப்ளஸ் 1 தேர்வு எழுதி தோல்வியடைந்த ஏராளமான மாணவர்கள் இருப்பதால், அவர்களுக்கு இந்த புதிய உத்தரவு பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து அதிகாரிகள், அந்த மாணவர்கள் தேர்ச்சி பெறும் வரை ப்ளஸ் 1 தேர்வு தொடரும் என்றும், வெற்றி பெறும் வரை வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
