தென்மேற்கு பருவமழை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து விலகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று (அக்.16, வியாழக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா-மாஹி, தெற்கு உள் கர்நாடகம், ராயல்சீமா மற்றும் தெற்கு கடலோர ஆந்திரப்பிரதேச பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை மற்றும் பலத்த காற்று வீசும் சூழ்நிலை நிலவும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மையம் மேலும் கூறுகையில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

நாளை (அக்.17, வெள்ளிக்கிழமை) சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வருகிற 19-ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரளா மற்றும் கர்நாடகத்துக்கு அப்பாலுள்ள பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக சென்னையில் சாரல் மழை பதிவாகியிருந்த நிலையில், இனி பருவமழை முழுமையாகத் துவங்கும் நிலை உருவாகியுள்ளது