தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பத்தாம் தேதி வரை அதாவது நாளைவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்த நிலையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக இன்று தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இதே போன்று நாளை மதுரை, திண்டுக்கல், தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.