தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் செப். 13-ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் பரப்புரை பயணத்தை தொடங்க உள்ளார். இதையொட்டி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

இந்த சுற்றுப்பயணத்திற்கான அனுமதியைப் பெற தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், காவல் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்தார். ஆனால், பரப்புரை பயணத்திற்கு காவல்துறை பல்வேறு காரணங்களை முன்வைத்து அனுமதி வழங்க மறுப்பதாக தவெக தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், அண்மையில் திருச்சிக்கு சென்று, அனுமதி கோரிய மனுவை வழங்கும் முன்னர், புஸ்ஸி ஆனந்த் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது ஏராளமான தவெகவினர் கூடினர். போலீசார் கலைக்குமாறு அறிவுறுத்திய போதும், அவர்கள் குழுவாகத் தங்கி வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு, அனுமதியின்றி கூட்டம் கூடுதல், போலீசாரை தடுத்து நிறுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தவெகவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்நிலையில், தவெக கொள்கைப் பரப்புப் பொதுச் செயலாளர் அருண் ராஜ் இது பற்றி தெரிவித்ததாவது: “மதுரை மாநாட்டின் வெற்றியால் திக்குமுக்காடும் ஆளுங்கட்சி, பயத்தில் பல்வேறு தடைகள் போடுகின்றது. புஸ்ஸி ஆனந்த் திருச்சியில் பரப்புரை தொடர்பான ஏற்பாடுகளுக்காக சென்றபோது, சட்டவிரோதமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திமுக அரசின் இந்த தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்,” என்றார்.

மேலும், தவெக  சிடிஆர் நிர்மல் குமார், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் தலைவரின் மீது மக்களிடையே அதிகரிக்கும் ஆதரவை கண்டித்தும், பயத்திலும் தமிழக அரசு தொடர்ந்து தடைகள் விதிக்கிறது. புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்தது காழ்ப்புணர்ச்சி செயலாகும். சட்டரீதியாக இதனை எதிர்கொள்வோம்,” எனக் கூறியுள்ளார்.