தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதி குறைபாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு ஒருங்கிணைந்த வசதிகள் உள்ளது. இருந்தாலும் ஊராட்சியில் வசிப்போர், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தான் குறைகளை பதிவு செய்ய முடிகிறது. தொலைதூரங்களில் வசிப்போம் புகார் தெரிவிக்க ஒன்றிய அலுவலகம் வருவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதனால் ஊராட்சிகளிலும் பொதுமக்கள் புகாரை தெரிவிக்க பிரத்தியேக மையம் ஏற்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஊராட்சி மணி என்ற பெயரில் புகார் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் 155340 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் எனவும் இந்த மையம் நாளை தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பெறப்படும் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க மாவட்ட வாரியாக தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.