தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி தேவையா என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ஒரு கட்சியின் தலைவராகவும் வேட்பாளராகவும் இருக்கும் நடிகர் நடித்த திரைப்படம் வெளியாவதற்கு கட்டுப்பாடு ஏதேனும் உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும் இதற்கு பதிலளித்த அவர், இது போன்ற சூழல் முதன்முறையாக எழுந்துள்ள ஒரு முக்கிய கேள்வி என்று குறிப்பிட்டதோடு, இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் கலந்தாலோசித்து உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் இந்த சந்திப்பின் போது தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 26-ம் தேதி வரை அவகாசம் உள்ளதாகவும், பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து பார்வையாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக ஏற்கனவே 50 கம்பெனி துணை ராணுவத்தினர் வந்துள்ள நிலையில், கூடுதலாக 250 கம்பெனி வீரர்கள் வரவழைக்கப்பட உள்ளதாகவும், சி-விஜில் செயலி மூலம் தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் அர்ச்சனா பட்நாயக் இந்தப் பேட்டியின் போது விரிவாக எடுத்துரைத்தார்.
