நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டிற்குத் தணிக்கை வாரியம் முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்தாலும் தங்களது பழைய அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “திரைப்படம் எந்தவிதப் பிரச்சினையுமின்றித் திரைக்கு வரவேண்டும் என்பதே எங்களது தற்போதைய விருப்பம். தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தடையைத் தாண்டி, உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என முழுமையாக நம்புகிறோம். படம் வெளியான பிறகு, இதன் பின்னணியில் பாஜக அழுத்தம் கொடுக்கிறதா அல்லது அரசியல் உள்நோக்கம் உள்ளதா என்பது போன்ற கேள்விகளுக்கு நாங்கள் விரிவாகப் பதில் அளிக்கிறோம்,” என்று கூறினார்.

‘ஜனநாயகன்’ படச் சிக்கலை முன்வைத்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பாஜக-வை விமர்சித்து வரும் வேளையில், தவெக தரப்பிலிருந்து வந்துள்ள இந்தத் தெளிவான விளக்கம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.