தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், கல்வி தந்தையாக போற்றப்படும் காமராஜரின் பிறந்த தினமான ஜூலை 15-ம் தேதி, ஆண்டுதோறும் ‘கல்வி வளர்ச்சி நாள்’ என கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனை முன்னிட்டு, பள்ளிக்கல்வித்துறை புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையின் படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் சீருடை அணிந்து, மாணவர்கள் பங்கேற்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஜூலை 15 அன்று பள்ளிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரை, ஓவியம், கவிதை, மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவர்களின் திறமையை வெளிக்கொணர வேண்டும் என்றும், இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காமராஜரின் கல்விக்கான பங்களிப்பை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பள்ளி அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.