தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் தூய்மையான மற்றும் சுகாதாரமான பள்ளி வளாகங்களை கட்டமைப்பதற்காக எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை உடன் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் என பலரும் இணைந்து செயல்படுகின்றனர். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு பள்ளியளவில் அமைக்கப்படும் குழுக்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி இதற்காக அமைக்கப்படும் குழுவினர் பள்ளிகளில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவது குறித்து திட்டம் இடம்பெறுவது அவசியம். பள்ளிகளில் காய்கறி தோட்டத்தை ஏற்படுத்தி அதில் விளையும் காய்கறிகளை சத்துணவுக்கு பயன்படுத்தலாம் . இது தவிர வகுப்பறை தூய்மை மற்றும் பராமரிப்பு போன்ற பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த ஐந்து மாணவர்கள் கொண்ட துணை குழுக்களையும் ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.