திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சனை துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் ரித்தன்யா சம்பவம் தொடர்பாக, அவருடைய மாமியாரின் ஜாமீன் மனு திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (27) , கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். உயிரிழப்புக்கு முன்னதாக, தனது தந்தையாரின் கைபேசிக்கு அனுப்பிய ஆடியோ பதிவு ஒன்றில், கணவர், மாமனார் மற்றும் மாமியாரால் நடத்தப்பட்ட தொடர் கொடுமைகளே தற்கொலைக்கான காரணம் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, ரித்தன்யாவின் குடும்பத்தின் புகாரின் பேரில், அவிநாசி போலீசார் மூன்று பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையில் சிறையில் அடைத்தனர். கடந்த வாரம், ரித்தன்யாவின் கணவரும், மாமனாரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், ரித்தன்யாவின் பெற்றோர் அதனை எதிர்த்து இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். இரு தரப்புகளின் வாதங்களை கேட்டதும், மாவட்ட நீதிமன்றம் ஜாமீனை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், இன்று ரித்தன்யாவின் மாமியார் சார்பாகவும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவையும் எதிர்த்து, ரித்தன்யாவின் பெற்றோர் மீண்டும் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திய மாவட்ட நீதிபதி, அனைத்து உண்மைகளையும் கருத்தில் கொண்டு, மாமியாரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தார்.

இந்த தீர்ப்பு, வரதட்சனை கொடுமை காரணமாக உயிரிழந்த ரித்தன்யாவின் பெற்றோருக்கு ஒரு நிவாரணமாகவே பார்க்கப்படுகிறது. மேலும், பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான சட்டத்துக்கு இது நம்பிக்கையை ஏற்படுத்தும் தீர்ப்பு என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.