விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி மேலாதிக்கத்திற்கு எதிராகக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். ஆங்கிலேய ஆதிக்கத்தை வீரத்துடன் எதிர்த்த தீரன் சின்னமலையைச் சூழ்ச்சியால் வீழ்த்த முனைந்ததைப் போலவே, இன்று ‘தொகுதி மறுவரையறை’ என்ற பெயரில் தமிழகத்தின் அரசியல் வலிமையைக் குறைக்க மத்திய அரசு சதி செய்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தமிழகத்திற்குள் நேரடியாக நுழைய முடியாத சக்திகள் இத்தகைய குறுக்கு வழிகளைக் கையாளுவதாக அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்க நினைக்கும் இந்த ஆதிக்கவாதிகளுக்கு, சில உள்ளுர் அரசியல்வாதிகள் கைக்கூலிகளாகச் செயல்படுவது வேதனையளிப்பதாக முதலமைச்சர் சாடியுள்ளார்.

இதனால் தங்களின் சுயநலத்திற்காகத் தமிழகத்தின் எதிர்காலத்தையே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் காலடியில் அடகு வைக்கச் சிலர் துணிந்துவிட்டதாகவும், இத்தகைய துரோகிகளையும் ஆதிக்க சக்திகளையும் எதிர்த்துத் தமிழ்நாடு ஒன்றிணைந்துப் போராடி வெற்றி பெறும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான இத்தகைய நகர்வுகளைத் தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதே அவரது இந்த அறிக்கையின் மையக்கருத்தாக உள்ளது.