தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்று அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி அஜிதா ஆக்னல் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக விஜய்யின் மக்கள் இயக்கத்தில் பணியாற்றி வந்த தான், கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சிக்காகக் கடுமையாக உழைத்த போதிலும், கட்சியின் தலைவர் விஜய் தன்னை ஒருமுறை கூட நேரில் சந்திக்கவில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்காமல், தனது நண்பரான நடிகர் ஸ்ரீநாத்துக்கு விஜய் வாய்ப்பு அளித்துள்ளதாகவும், குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கு மட்டுமே கட்சியில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்துள்ளார்.
இதனால் த.வெ.க-வில் இருந்து விலகிய அஜிதா ஆக்னல், கனிமொழி எம்.பி முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனைச் சந்தித்து வாழ்த்து பெற்ற அவர், தி.மு.க-வில் பெண்களுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும் “பெற்ற பிள்ளைகளுக்கே கடன் கொடுத்தேன் என்று சொல்லும் ஒரே தலைவர் விஜய் தான்” என்று அவர் விஜய்யை விமர்சித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலம் விசுவாசமாக இருந்த நிர்வாகி ஒருவரே இவ்வாறு விமர்சனம் செய்திருப்பது த.வெ.க-வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
