கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பயன்பாட்டில் இல்லாத கும்பகோணம் புதிய பைபாஸ் சாலை, கண்ணு தோப்பு பாலம் பகுதியில், அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் உடல் சந்தேகத்திற்கிடமான முறையில் மண்ணில் புதைக்கப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையுமே உலுக்கியெடுத்துள்ளது!

இந்த அதிரடித் தகவல் கிடைத்ததும், கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ஏஎஸ்பி கோடீஸ்வரன், நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினர்.

உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வடலூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து தீவிர வேட்டையில் இறங்கினர்.

போலீசாரின் இந்த மின்னல் வேக விசாரணையில், உயிரிழந்தவர் வடலூர் சர்வேதயா நகரைச் சேர்ந்த மஞ்சுளா (38) என்பதும், அவரது கணவர் கண்ணன் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்த கொடூரக் கொலையைச் செய்தது சேப்பளநத்தம் காமராஜ் நகரைச் சேர்ந்த சம்பத் (39) என்பது அம்பலமாகி ஒட்டுமொத்தக் கதையையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி சென்னையிலிருந்து பேருந்து மூலம் வந்த மஞ்சுளா, கோலியனூர் கூட்டுரோட்டிற்குத் தன்னை அழைத்துச் செல்லும்படி சம்பத்தைக் கேட்டுள்ளார்.

அதன்படி இருசக்கர வாகனத்தில் மஞ்சுளாவை அழைத்து வந்த சம்பத், கண்ணுத்தோப்பு பாலம் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சம்பத், தன்னிடம் இருந்த கத்தியால் மஞ்சுளாவின் கழுத்தை அறுத்த கொடூரம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர், உடலை சாலையோர பள்ளத்தில் தள்ளி மண்ணைப்போட்டு மூடிவிட்டு, மஞ்சுளாவின் செல்போன் மற்றும் கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை முட்புதரில் வீசி எறிந்துவிட்டு தப்பியோடியுள்ளார். தற்போது தனிப்படை போலீசார் கொலையாளி சம்பத்தைக் கைது செய்து, அவரிடமிருந்த செல்போன் மற்றும் பைக்கைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் கடலூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!