தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக-வுக்கு கடும் சவாலாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உருவெடுத்துள்ளதாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமைப்பு (IPTS) நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

“தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகும் வாய்ப்பு யாருக்கு அதிகம்?” என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதிலின் அடிப்படையில், தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகிய இருவரும் சமமான அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான் மற்றும் கனிமொழி ஆகியோர் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கட்சிகளின் பலம் மற்றும் வாக்கு வங்கி குறித்த கணிப்பில் ஆளுங்கட்சியான திமுக-வை முந்தி, விஜய் தலைமையிலான தவெக முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி

தவெக: 19.20%

திமுக: 17.7%

அதிமுக: 15.32%

நாதக: 6%

நகர்ப்புற வாக்காளர்களின் ஆதரவைப் பொறுத்தவரை திமுக (24.77%) முதலிடத்திலும், தவெக (23.46%) மிக நெருக்கமான இரண்டாம் இடத்திலும் உள்ளன.

இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகள் தேர்தல் களத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் காட்டுகின்றன. தமிழக வெற்றிக் கழகம் சுமார் 50 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 80 தொகுதிகளில் தவெக இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சுமார் 80 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என்ற அதிர்ச்சிகரமான தகவலையும் இந்தக் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

திமுக, அதிமுக என இரு துருவ அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த தமிழகத்தில், புதிதாகக் களம் கண்டுள்ள விஜய் 25 சதவீதம் வரை வாக்குகளைப் பெறுவார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். குறிப்பாகப் பெண்கள் மற்றும் இளைஞர்களிடையே அவருக்கு ஏற்பட்டுள்ள பேராதரவு, பாரம்பரியக் கட்சிகளுக்குப் பெரும் சவாலாக இருக்கும் என இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன