தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 30.62 சதவீத வாக்குகளுடன் மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக லயோலா முன்னாள் மாணவர் அமைப்பான இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் (IDPI) நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்த 61-வது கள ஆய்வு முடிவுகளை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு வெளியிட்டார். அதன் முக்கிய விவரங்கள் பின்வருமாறு:
முதலமைச்சர் ரேஸில் மு.க.ஸ்டாலின் முதலிடம் அடுத்த முதலமைச்சராகும் வாய்ப்பு யாருக்கு அதிகம்?” என்ற கேள்விக்கு பொதுமக்கள் அளித்த பதில்கள்:
மு.க. ஸ்டாலின்: 55%
விஜய்: இரண்டாம் இடம்
எடப்பாடி பழனிசாமி: மூன்றாம் இடம்
கட்சி வாரியான வாக்கு சதவீதம் (கணிப்பு)
இந்தத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவ வாய்ப்புள்ள சூழலில், வாக்குகள் பின்வருமாறு பிரியக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| திமுக கூட்டணி | 30.62% |
| அதிமுக கூட்டணி | 26.39% |
| தமிழக வெற்றிக் கழகம் | 21.07% |
| நாம் தமிழர் கட்சி | 7.50% |
ஆட்சி மற்றும் கட்சி செயல்பாடுகள் குறித்த மக்களின் பார்வை திமுக வாக்குறுதிகள்: 2021 தேர்தல் அறிக்கையை திமுக நிறைவேற்றியதா என்ற கேள்விக்கு 47% பேர் ‘இல்லை’ என்றும், 25% பேர் ‘ஆம்’ என்றும், 17% பேர் ‘ஓரளவு’ என்றும் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் செயல்பாடு: கடந்த 4¾ ஆண்டு கால முதலமைச்சரின் செயல்பாடுகள் ‘சரியில்லை’ என 54% பேரும், ‘நன்றாக உள்ளது’ என 37% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக தலைமை: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வளர்ச்சியடையவில்லை என்று 60% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை திமுகவுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அதனைத் தொடர்ந்து விசிக மற்றும் அதிமுகவுக்கு பாதிப்பு இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இளம் வாக்காளர்களைக் கவர்வதில் விஜய் முதலிடத்திலும், அண்ணாமலை இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இருப்பினும், விஜய்யை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட முடியாது என 50% பேர் கூறியுள்ளனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் தேர்தலில் எம்.எல்.ஏ-வாக வேண்டும் என 69% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
திமுக வலுவான கூட்டணியைக் கொண்டுள்ளதால் முன்னிலையில் உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வலுவான கூட்டணியை அமைக்கும் பட்சத்தில் இரண்டாம் இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. அதிமுக இரண்டாம் இடத்திற்கு கடும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாக்குகள் சிதறுவது திமுகவுக்குச் சாதகமாக அமையும் எனக் கூறப்படுவதை இந்த ஆய்வு மறுக்கிறது.
