தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேசமயம் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.