தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொது தேர்வுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. இதில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது முதல் மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மறுக்கூட்டல் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளைப் போல பத்தாம் வகுப்புக்கும் மறு மதிப்பீடு வாய்ப்பு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு, துணைத் தேர்வு மற்றும் தனித் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாள்களில் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்து வெளியிடப்படும் முடிவுகளில் மதிப்பெண்கள் மாற்றம் இல்லாத மற்றும் மறுகூட்டல் மதிப்பெண்கள் முடிவுகளில் திருப்திகரமாக இல்லை என கூறுகின்றனர். இதனால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கவும், மறு கூட்டல் மறு மதிப்பீடு ஆகிய பணிகளை வழங்கவும் அரசு தேர்வுகள் இயக்குனருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விடைத்தாள்களின் ஸ்கேன் நகல் பெறுவதற்கு ஒரு பாடத்திற்கு 275 ரூபாய், மறு மதிப்பீடு செய்வதற்கு ஒரு பாடத்திற்கு 505 ரூபாய், மறு கூட்டல் செய்ய விரும்பினால் 205 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.