தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பத்தாம் வகுப்பு பாடத்திட்டங்களில் கடந்த 2019 ஆம் கல்வி ஆண்டில் மாற்றங்கள் செய்யப்பட்டன. பாடத்திட்டங்களின் மாற்றத்தால் வினாத்தாள்களின் அமைப்பு மாற்றியமைக்கப்பட்டது. ஆனால் வினாத்தாள் மாற்றியமைப்பின் மூலமாக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறுவது மாணவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. மொத்தம் 35 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி என்ற நிலையில் அறிவியல் பாடத்தில் செய்முறை பிரிவில் 15 மதிப்பெண்களும் தியரி தேர்வில் 20 மதிப்பெண்களும் கட்டாயம் பெற வேண்டும்.

அதேசமயம் மாற்றத்தின்போது இரண்டு மதிப்பெண் வினாக்களின் எண்ணிக்கையானது குறைக்கப்பட்டு ஏழு மதிப்பெண் வினாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமம் அடைவது குறித்து பள்ளிக்கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பள்ளிக் கல்வித் துறை பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் வினாத்தாள் அமைப்பை மாற்றம் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இரண்டு மதிப்பெண் வினாக்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கப்பட்டு 7 மதிப்பெண் வினாக்கள் ஐந்து மதிப்பெண் வினாக்களாக மாற்றம் செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்த கல்வி ஆண்டில் வெளியாகும் பட்சத்தில் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.