தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என கடந்த 2018 ஆம் ஆண்டு லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் காவல்துறையினர் போராட்டத்தை அடக்குவதற்காக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 77 பேர் காயங்களுடன் உயிர்பிழைத்த நிலையில் இந்த போராட்டத்தில் இறந்தவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் மே 22ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள மதுபான கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 53 மதுபான கடைகளும், பாருகளும் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த அறிவிப்பையும் ஏறி மதுபானங்களை விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.