தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் இன்று தமிழக முதல்-அமைச்சராகப் பதவியேற்கிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் அவர் பொறுப்பேற்றுக்கொள்கிறார்.

நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்த த.வெ.க. தலைவர் விஜய், தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குத் தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அவர் கவர்னரிடம் சமர்ப்பித்தார். அதனை ஏற்றுக்கொண்ட கவர்னர், ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு விடுத்தார். இன்று காலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில், த.வெ.க. தலைவர் விஜய்க்கு கவர்னர் ராஜேந்திர அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது, தமிழ்நாட்டு முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும், அவரது அமைச்சரவையினருக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகள். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அல்லாத ஒரு கட்சி, நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை ஆளவிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த பதவியேற்பு விழாவையொட்டி சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திரையுலகினரும், த.வெ.க. தொண்டர்களும் பெருந்திரளாகச் சென்னையில் குவிந்து வருவதால் விழாக்கோலம் பூண்டுள்ளது.