தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி நடப்பு நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக தற்போது பள்ளி மாணவர்கள் மற்றும் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 2000 ரூபாய் உதவி தொகையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 6000 ரூபாயும், ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ மாணவர்களுக்கு 8000 ரூபாயும் இளநிலை மாணவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு 14 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்லாமல் பார்வையற்ற மாணவர்களுக்கும் தனியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக பல உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அரசு இந்த உதவி தொகையை பெற விருப்பமுள்ள மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.