தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் புத்தாண்டு நள்ளிரவில் பெய்த திடீர் மழையால் மக்கள் போட்டிருந்த வண்ணக் கோலங்கள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன. மழையையும் பொருட்படுத்தாமல் உற்சாகத்துடன் பொதுமக்கள் 2026 புத்தாண்டை வரவேற்றனர்.
2026-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக நேற்று மாலை முதலே பொதுமக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் ‘ஹாப்பி நியூ இயர் 2026’ என வண்ணப் பொடிகளால் கோலமிட்டுத் தயாராகினர். ஆனால், எதிர்பாராத விதமாக இரவு 11 மணியளவில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்தது. இதனால் வாசல்களில் இடப்பட்டிருந்த கோலங்கள் மழைநீரில் கரைந்து ஓடின. திறந்தவெளியில் செய்யப்பட்டிருந்த புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகளும் மழையினால் பாதிக்கப்பட்டன.
இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நள்ளிரவில் மழை பெய்துள்ளது. மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள போதிலும், பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் பொதுமக்கள் 2025-க்கு விடை கொடுத்து 2026-ஐ உற்சாகமாக வரவேற்றனர்.
இன்று அதிகாலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி:
காலை 7 மணி வரை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்கு: திண்டுக்கல், கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மேகமூட்டமான சூழல் நிலவி வருவதால், இன்றைய பொழுது மழையுடனேயே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது
