தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து முடிந்த நிலையில் கடந்த மே 8ம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 47 ஆயிரத்து 934 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மற்றும் தேர்வுக்கு செல்லாத மாணவர்களுக்கு ஜூன் 19 முதல் 26 ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடைபெற உள்ளது.

இந்த தேர்வு எழுத மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலும் தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களிலும் மே 11ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் துணை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 17ஆம் தேதி அதாவது நாளை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. நாளை விண்ணப்பிக்க தவற ஓர் சிறப்பு அனுமதி திட்டத்தில் உரிய கூடுதல் கட்டணத்துடன் சனிக்கிழமை வரை இணையவழியில் ஆயிரம் ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.