தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே புத்தன்தருவை வேதக்கோவில் தெருவைச் சேர்ந்த மெட்டில்டா, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஜேம்ஸ் சித்தர் செல்வன் (54). தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனர். குடும்பம் தட்டார்மடம் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறது.

கடந்த 3-ம் தேதி மாலை, ஜேம்ஸ் சித்தர் செல்வன் சாத்தான்குளம் அருகே திருப்பணி – புத்தன்தருவை பகுதியில் சமீபத்தில் வாங்கிய நிலத்தைப் பார்வையிட சென்றிருந்தார். அப்போது அண்டை நில உரிமையாளரான ஜேக்கப் (ஆபிரகாம் மகன்) அவர் இருக்கும் இடத்துக்கு வந்துள்ளார். இருவருக்கும் நில எல்லை தொடர்பாக முன்பே தகராறு இருந்து வந்த நிலையில், மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த ஜேக்கப், முன்கூட்டியே மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜேம்ஸ் சித்தர் செல்வனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து தப்பிச் சென்றார். சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஜேக்கப்பைத் தேடி 3 தனிப்படைகளை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் ஜேக்கப் புத்தன்தருவை காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, 4-ம் தேதி இரவு அங்கு சென்ற தனிப்படை போலீசார் அவர் பதுங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்டு அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் ஜேக்கப் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அனுப்பப்பட்டார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.