தமிழகத்தில் காலி மதுபாட்டில்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு ரூ.10 வழங்கும் திட்டம் அமலுக்கு வருகிறது.
டாஸ்மாக் நிறுவனத்தின் அமைப்பு ரீதியாகப் பிரிக்கப்பட்டுள்ள சென்னை வடக்கு, சென்னை தெற்கு மற்றும் சென்னை மத்திய ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இத்திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: வாடிக்கையாளர்கள் மதுபானம் வாங்கும்போது, ஒவ்வொரு பாட்டிலுக்கும் அதன் விலையுடன் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படும்.
மது அருந்திய பிறகு, காலி பாட்டில்களை அதே டாஸ்மாக் கடையில் ஒப்படைக்கும்போது, ஏற்கனவே செலுத்திய ரூ.10-ஐ வாடிக்கையாளர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை சாலைகளிலும், பொது இடங்களிலும் வீசுவதால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடு மற்றும் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்துவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். மலைப்பிரதேசங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இத்திட்டம், தற்போது தலைநகர் சென்னையிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசி எறிவதைத் தவிர்த்து, மீண்டும் கடைகளிலேயே ஒப்படைத்து இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
