தமிழகத்தில் சார்பதிவாளர் நிலையில் பத்திரப்பதிவில் தவறுகள் நடைபெற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட பதிவாளர்கள் மற்றும் டிஐஜிக்களிடம் புகார் அளிக்கின்றனர். புகார்களை முறையாக பதிவு செய்து விசாரிக்க வேண்டியது மாவட்ட பதிவாளர்கள் மற்றும் டிஐஜி களின் பொறுப்பாகும். ஆனால் பொது மக்களின் புகார்களை அதிகாரிகள் அலட்சியமாக கிடப்பில் போடுவதாக புகார் எழுந்துள்ளது. நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் நோட்டீசுகளும் கண்டு கொள்ளாமல் இருப்பதால் உரிய காலத்தில் அதிகாரிகள் பதிலளிக்காமல் நீதிமன்றத்தின் அதிருப்திக்கு பதிவுத்துறை ஆளாகியுள்ளது.

இந்த நிலையில் புகார்கள் மற்றும் வழக்குகள் தொடர்பான கடிதங்கள் கிடப்பில் போடப்படுவதால் துறைக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றது. வழக்குகள் தொடர்பான குறிப்புகளை அனுப்பும் அதிகாரிகள் மிக கவனமாக செயல்பட வேண்டும் என்று பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே சமயம் குறிப்பு ஆவணங்களில் அதனை அனுப்பும் அதிகாரியின் விவரங்கள் முறையாக இடம் பெற வேண்டும். புகார்கள் மற்றும் வழக்கு கடிதங்களில் டிஐஜி- கள் மிக கவனமாக செயல்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.