தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி ஐந்து தவணைகளுக்கு பதிலாக மூன்று தவணைகளில் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு சார்பாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் கர்ப்பிணியர் கருத்தரித்த 12 வாரத்திற்குள் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரிடம் ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு எண் விவரங்களை கொடுத்து பெயரை பதிவு செய்ய வேண்டும்.

அப்போது 2000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். நான்காவது மாதத்திற்கு பிறகு இரண்டாவது தவணையாக 2000 ரூபாய் வழங்கப்படும். அதே சமயம் உடல் திறனை மேம்படுத்தும் விதமாக சத்துமாவு, இரும்பு சத்து டானிக் மற்றும் உளறு பேரிச்சை உள்ளிட்ட பல பொருட்கள் அடங்கிய 2000 ரூபாய் மதிப்பிலான பெட்டகம் இரண்டு முறை வழங்கப்படும். அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்த பிறகு மூன்றாவது தவணையாக 4 ஆயிரம் ரூபாய், குழந்தைக்கு தடுப்பூசி போடும்போது நான்காவது தவணையாக 4000 ரூபாய், குழந்தைக்கு ஒன்பதாவது மாதம் முடிந்தவுடன் ஐந்தாவது தவணையாக 2000 ரூபாய் என மொத்தம் 14 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும் 4000 ரூபாய் மதிப்பிலான பெட்டகம் என 18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்படுகின்றது.

இந்த திட்டத்தில் பணம் வழங்குவது ஐந்து தவணைக்கு பதிலாக தற்போது மூன்று தவணையாக குறைக்கப்பட்டுள்ளது . அதன்படி கர்ப்ப காலத்தில் நான்காவது மாதத்தில் 6 ஆயிரம் ரூபாய், குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் 6 ஆயிரம் ரூபாய், ஒன்பதாவது மாதத்தில் 2000 ரூபாய் என மொத்தம் 14 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.