
வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இரவு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கக்கடல் பகுதி அருகே உள்ள பூரி-தீகா இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் உட்பட பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதோடு வருகிற 14-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரையில் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் இன்று முதல் வருகிற 12-ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.