
தமிழகத்தில் சமீபத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் அரசு பேருந்துகளிலும் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு பேருந்துகளின் கட்டண உயர்வு தொடர்பாக தற்போது அமைச்சர் சிவசங்கர் ஒரு முக்கிய தகவலை கூறியுள்ளார். இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது, தமிழக முதல்வர் ஸ்டாலின் மொத்தமாக 7,200 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி இந்த வாரத்துடன் 1300 அரசு பேருந்துகள் அமலுக்கு வரும். மீதமுள்ள பேருந்துகளை தயாரிப்பு நிறுவனம் வழங்கிய பிறகு பழைய பேருந்துகளுக்கு பதில் புதிய பேருந்துகள் இயக்கப்படும்.
தமிழகத்தில் சில தவிர்க்க முடியாத காரணத்தால் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதேபோன்று பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள். அவர்களின் தேவையில்லாத குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் விருப்பம் ஒருவேளை அதுவாக இருந்தால் நாங்கள் அதற்கு பதிலளிக்க விரும்பவில்லை. அரசு போக்குவரத்து கழகங்களில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். தனியார் பேருந்துகள் அதிக வேகமாக செல்வதால் விபத்து ஏற்படுவதாக புகார்கள் வருவதால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க விரைவில் குழு அமைக்கப்படும் என்று கூறினார். மேலும் இதன் மூலம் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயராது என்பது தெரியவந்துள்ளது.