திமுக – தேமுதிக கூட்டணி தமிழக மக்களின் எண்ணங்களுக்கு நேர்மாறாக அமைந்துள்ளது என்றும், வரும் தேர்தலில் மக்கள் திமுகவிற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது: தேமுதிக தற்போது திமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது தமிழக மக்களின் மனநிலைக்கு ஏற்றது அல்ல.
மறைந்த தலைவர் விஜயகாந்த் தனது வாழ்நாளில் திமுகவுடன் கூட்டணி அமைத்ததில்லை. அந்த நிலைக்கு முற்றிலும் மாறாக தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, மக்களின் ஆதரவைப் பெறாது. மாறாக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தான் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.
மாநில சுயாட்சிக்காகச் சட்டம் இயற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். மத்திய ஆட்சியில் பல ஆண்டுகளாக அங்கம் வகித்தபோது, திமுக மாநில சுயாட்சி குறித்தோ அல்லது இந்தி திணிப்பு குறித்தோ கவலைப்பட்டதில்லை. மத்திய அரசில் செல்வாக்குமிக்க இலாகாக்களைப் பெறுவதிலேயே அவர்கள் குறியாக இருந்ததை நாடு அறியும். வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்தபோது கூட, குறைந்தபட்ச செயல் திட்டத்தில் சுயாட்சியை அவர்கள் வலியுறுத்தவில்லை.
லாப நஷ்டங்களைக் கணக்கிடாமல் கூட்டணி தர்மத்தைக் கடைபிடிக்கும் ஒரே கட்சி தமாகா தான். சட்டமன்றத்தில் தமாகாவின் குரல் ஒலிக்க வேண்டும் என்பதே எனது இப்போதைய இலக்கு. ஆட்சியில் பங்கு அல்லது ராஜ்யசபை உறுப்பினர் பதவி குறித்து நாங்கள் தற்போது சிந்திக்கவில்லை. கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வதே எங்களது முதல் பணி.
காங்கிரஸ் கட்சி தற்போது பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி என்பது முரண்பாடுகளின் மொத்த உருவம். சுக்குநூறாக உடைந்த ஒரு பொருளை எப்படி ஒட்ட வைத்தாலும் அது மீண்டும் உடையவே செய்யும். வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சுமைகளை மக்கள் மீது ஏற்றிய திமுக அரசுக்கு எதிராக வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்று கூறினார்.
