தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் நிலவும் தாமதத்திற்கு திமுகவே காரணம் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் கூறியதாவது: “திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக தற்போது எழுந்துள்ள குழப்பங்களுக்கு திமுகவே முழுப் பொறுப்பு. தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தரப்பில் குழு அமைக்கப்பட்டுத் தயாராக உள்ளது. ஆனால், திமுக இதுவரை பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்காமல் காலந்தாழ்த்தி வருவது ஏன் என்று புரியவில்லை. திமுகவின் இந்த மெத்தனப் போக்கே தற்போதைய சலசலப்புகளுக்குக் காரணம்.

திமுக – காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஒன்றாகப் பயணித்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும். எங்களை வெறும் ‘கூட்டலாக’ (Addition) திமுக பார்க்கக்கூடாது; ஒரு கூட்டணியின் பலத்தை அதிகரிக்கும் ‘பெருக்கலாக’ (Multiplication) மட்டுமே பார்க்க வேண்டும். 1967-க்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை என்பதும், தற்போது தனித்து நிற்கும் பலம் எங்களிடம் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால், காங்கிரஸ் எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ, அந்தக் கூட்டணியே பலம் வாய்ந்ததாக மாறி ஆட்சியை அமைக்கும் என்பது வரலாறு.

தமிழகத்தில் ஒருவேளை அதிமுக ஆட்சி அமைந்தால், அது மறைமுகமாக பாஜகவின் ஆட்சியாகவே இருக்கும். எனவே, மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.”

இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், ஆளுங்கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.