ஈரான் மீது அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அமெரிக்காவுடன் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்று ஈரான் அரசு அதிரடியாகத் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து வரும் கருத்துகள் உண்மையல்ல என்றும் ஈரான் விளக்கமளித்துள்ளது.
ஈரானிய உயரதிகாரி ஸோல்ஃபகாரி இது குறித்துக் கூறுகையில், “எதிர்த் தரப்பில் நிலவும் குழப்பங்களும், உள்நாட்டு முரண்பாடுகளும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. அமெரிக்கா யாரிடமும் பேசவில்லை, அது தன்னுடன் தானே பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். இதன் மூலம், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் எவ்விதத்திலும் நடைபெறவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
ஈரானின் ராணுவ பலத்தை அங்கீகரிக்கும் வரை, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பழைய பொருளாதார மற்றும் எரிசக்தி நிலைகள் திரும்பாது என்று அவர் எச்சரித்தார். வெளியிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தங்களை விட, ஈரானின் ஆயுதப் படைகளின் வலிமையே பிராந்தியத்தின் நீண்டகால ஸ்திரத்தன்மைக்கு அடிப்படை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்ட ஆர்வமாக உள்ளது, அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன” என்று தொடர்ந்து கூறி வருகிறார். இருப்பினும், அந்தப் பேச்சுவார்த்தையில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்த விபரங்களை அவர் வெளியிடவில்லை. இருப்பினும், தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலின்படி, வாஷிங்டன் தரப்பில் சில முக்கிய நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன்படி
ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை முழுமையாகக் கைவிடுதல். தற்காலிகப் போர் நிறுத்தம். ஈரானின் ஏவுகணை வளர்ச்சி குறித்த விரிவான கட்டுப்பாடுகள் போன்றவைகள் ஆகும். மேலும் மத்திய கிழக்கு நாடுகளின் இடைத்தரகர்கள் மூலம் இரு நாடுகளையும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஈரானின் இந்தத் ‘திட்டவட்டமான மறுப்பு’ வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே நிலவும் பெரும் இடைவெளியைக் காட்டுகிறது.
