அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச எரிசக்தி விநியோகத்திற்கு மிக முக்கிய வழித்தடமான ‘ஹார்முஸ் ஜலசந்தியை’  நிபந்தனைகளுடன் திறக்க ஈரான் முன்வந்துள்ளது. இதன் மூலம் உலகளவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், ஈரானின் கடும் நிபந்தனைகள் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டணிக்கும், ஈரானுக்கும் இடையே போர் தொடங்கி 24 நாட்கள் கடந்துவிட்டன. போர் தொடங்கியவுடன்,  ஜலசந்தி வழியாகச் செல்லும் எண்ணெய் மற்றும் எரிவாயு டாங்கர்களை ஈரான் சிறைபிடித்ததுடன், அந்த வழித்தடத்தையும் மூடியது. இதனால் உலகெங்கும் கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தற்போது உலக நாடுகளின் அழுத்தத்தினால், இந்த கடல்வழிப் பாதையை மீண்டும் திறக்க ஈரான் சம்மதித்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு (UNSC) ஈரான் அனுப்பியுள்ள கடிதத்தில் சில ‘அதிரடி’ நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் நாடுகளின் கப்பல்களுக்கு இந்த வழித்தடத்தில் நுழைய முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

 ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவு தராத நாடுகளின் கப்பல்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அனுமதிக்கப்படும் கப்பல்கள் ஈரானிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, அவர்களின் ‘பாதுகாப்பு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஈரான் யாரை ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ எனக் கருதுகிறதோ, அந்த நாடுகளுக்கு இந்த வழித்தடம் என்றும் மூடப்பட்டே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், இந்தியாவுக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் மற்றும் திரவ எரிவாயு (LPG) ஏற்றிய 20 கப்பல்கள் மேற்கு ஆசியப் பகுதியில் கடந்த பல நாட்களாகக் காத்திருக்கின்றன. இது குறித்து இந்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் சின்ஹா கூறுகையில், “எங்களது 20 கப்பல்களும் எல்லைகளைக் கடக்கத் தயார் நிலையில் உள்ளன. ஆனால், அவை எப்போது இந்தியாவிற்கு வந்து சேரும் என்பது குறித்து இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியாது” எனத் தெரிவித்துள்ளார். மேலும்  இந்தியக் கப்பல்கள் எப்போது தாயகம் திரும்பும் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.