நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது தந்தையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘அன்பாலோ’ செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தனது முதல் திரைப்படத்தை இயக்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சஞ்சய், திடீரென இத்தகைய முடிவை எடுத்தது ஏன் என ரசிகர்கள் மத்தியில் பலத்த விவாதங்கள் எழுந்துள்ளன.

மேலும் ஏற்கனவே விஜய் தனது அரசியல் வருகையை ‘தமிழக வெற்றிக் கழகம்’ மூலம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், குடும்ப உறவுகளுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதா அல்லது இது வெறும் தொழில்நுட்பக் கோளாறா என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.

இருப்பினும், இந்த விவகாரம் குறித்து சஞ்சய் தரப்பிலிருந்தோ அல்லது விஜய் தரப்பிலிருந்தோ இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. சினிமா வட்டாரங்களில் ஒரு சிலர் இது சஞ்சய்யின் தனிப்பட்ட விருப்பம் அல்லது கவனத்தை திசைதிருப்பாமல் இருக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.

இந்நிலையில் ஒருபுறம் விஜய் தனது கடைசித் திரைப்படமான ‘தளபதி 69’ மற்றும் முழுநேர அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வரும் வேளையில், மறுபுறம் சஞ்சய் லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அறிமுகப் படத்தின் பணிகளில் பிஸியாக இருப்பதால், தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.