ஜார்க்கண்ட் மாநிலம் லேட்ஹர் மாவட்டம் சசாங் கிராமத்தைச் சேர்ந்த முகமது முன்டஜிர் (வயது 34) என்பவரும், சத்ரா மாவட்டம் லம்டா கிராமத்தைச் சேர்ந்த நூர்ஜஹான் (வயது 24) என்பவரும், கடந்த சில மாதங்களாக காதல் உறவில் ஈடுபட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

நேற்று மாலை தனது காதலியை சந்திக்க நூர்ஜஹானின் கிராமத்திற்குச் சென்ற முகமது, அவளுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்தார். அந்த சந்திப்பின் போது, நூர்ஜஹான் திருமண விவகாரத்தை எழுப்பிய நிலையில், அதற்கும் முகமது நேரடி மறுப்புத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடும் ஆத்திரமடைந்த நூர்ஜஹான், தன்னுடன் எடுத்துச் சென்றிருந்த கூர்மையான கத்தியால் முகமதுவை சரமாரியாக  குத்தியுள்ளார். இந்த திடீர் தாக்குதலால் முகமது அப்படியே ரத்த வெள்ளத்தில் சாய்ந்து விழுந்துள்ளார்.

அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த கிராம மக்கள், உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதித்த மருத்தவர்கள், முகமது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நூர்ஜஹானை கைது செய்துள்ளனர். தற்போது குற்றவாளியான நூர்ஜஹான் சிறையில் அடைக்கப்பட்டு, தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் விவகாரத்தில் திடீரென ஏற்பட்ட மனமுடைப்பு, பரிதாபமான கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.