டெல்லியில் நடைபெற்று வரும் சர்வதேச செயற்கை நுண்ணறிவு (AI) மாநாட்டில், சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோ நாயை தங்கள் பல்கலைக்கழக மாணவர்களின் கண்டுபிடிப்பு எனத் தவறாகக் காட்சிப்படுத்தியதற்காக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் மன்னிப்பு கோரியுள்ளது.
டெல்லி பாரத் மண்டபத்தில் கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய இந்த உலகளாவிய ஏஐ மாநாட்டில், 110 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் கல்கோடியாஸ் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் ஒரு ரோபோ நாய் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால், அது சீனாவைச் சேர்ந்த ‘யுனிட்ரீ கோ2’ (Unitree Go2) என்ற மாடல் என்பதும், அதன் சந்தை மதிப்பு சுமார் ரூ. 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை என்பதும் தெரியவந்தது. உள்நாட்டுத் தயாரிப்பு எனக்கூறி சீனத் தயாரிப்பைக் காட்சிப்படுத்தியது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து, மாநாட்டிலிருந்து அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் வெளியேற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தக் குழப்பத்திற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். அரங்கில் இருந்த அலுவலருக்கு அந்த ரோபோ எங்கு தயாரிக்கப்பட்டது என்பது குறித்த முழுமையான விவரம் தெரியவில்லை. தவறான பிம்பத்தை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல” என்று விளக்கம் அளித்துள்ளது.
மேலும் இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
