தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் மிக வேகமாக மாறி வருகிறது. நீண்ட கால கூட்டாளியான காங்கிரஸ் கட்சி, தற்போது தமிழக முதல்வர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியுடன் கைகோர்த்துள்ளதால், தோல்வியைச் சந்தித்த திமுக தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவது அல்லது வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது குறித்து திமுக பரிசீலித்து வருவதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
நாடாளுமன்றத்தில் தங்களுக்கு வலுவான பெரும்பான்மையை உறுதி செய்ய, திமுக வசம் இருக்கும் 22 மக்களவை எம்பிக்கள் மற்றும் 8 மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற பாஜகவும் தீவிரம் காட்டி வருகிறது.
ஏற்கனவே காங்கிரஸுடனான உறவு முறிந்த நிலையில், லோக்சபாவில் தங்களுக்குத் தனி இருக்கை ஒதுக்கக் கோரி சபாநாயகருக்கு திமுக கடிதம் எழுதியிருப்பது இந்த கூட்டணி மாற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இருப்பினும், கடந்த காலங்களில் உதயநிதி ஸ்டாலின் பேசிய ‘சனாதன தர்ம’ சர்ச்சை இரு கட்சிகளும் நேரடியாக இணைவதற்குச் சவாலாக இருப்பதால், மசோதாக்களுக்கு மட்டும் வெளிப்புற ஆதரவு அளிக்கும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
