திருச்சி ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் திமுக-வுக்கு வெறும் 5 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ள சம்பவம், அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ரமேஷ் 1,03,235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் எஸ். துரைராஜ் 69,645 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வாக்குச்சாவடி வாரியாக வாக்கு விபரங்கள் வெளியானபோதுதான் அந்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது.

ஸ்ரீரங்கம் பெண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 91-வது வாக்குச்சாவடியில் திமுக-வுக்கு வெறும் 5 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதே சமயம் அங்கு அதிமுக-வுக்கு 236 வாக்குகளும், த.வெ.க-வுக்கு 51 வாக்குகளும் கிடைத்துள்ளன. இச்சம்பவம் குறித்து திமுக நிர்வாகிகள் குமுறுவதற்குக் காரணம் ஒரு முக்கியக் கணக்குதான். வழக்கமாக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பூத் கமிட்டி உறுப்பினர்கள், முகவர்கள், இளைஞரணி மற்றும் மகளிரணி நிர்வாகிகள் என மொத்தம் 14 பேர் திமுக சார்பில் நியமிக்கப்படுகின்றனர்.

இவர்கள் அனைவரும் முறைப்படி திமுக-வுக்கு வாக்களித்தாலே குறைந்தபட்சம் 14 வாக்குகள் வந்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 5 வாக்குகள் மட்டுமே விழுந்திருப்பது, நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே கட்சிக்கு வாக்களிக்கவில்லையா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதேபோல் 87 மற்றும் 93-வது வாக்குச்சாவடிகளிலும் திமுக 50-க்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. இது குறித்து மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணியிடம் கேட்டபோது, “இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, கட்சித் தலைமைக்கு அறிக்கை அனுப்பப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணிகளில் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டும், களத்தில் நின்ற நிர்வாகிகளே கட்சிக்கு வாக்களிக்கத் தவறியது திமுக வட்டாரத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.