மத்திய பிரதேச மாநிலத்தின் மொரேனா பகுதியில், ஓடும் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுவிட்டதாகப் பரவிய ஒரு தவறான வதந்தியால் பயந்துபோய் தண்டவாளத்தில் குதித்து ஓடிய பயணிகள் மீது, எதிரே வந்த மற்றொரு அதிவேக ரயில் மோதியதில் ஒரு சிறுவன் மற்றும் 3 பெண்கள் உட்பட 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள நெஞ்சை உலுக்கும் கோர விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜூன் 14 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:15 மணியளவில் மொரேனாவில் உள்ள ஹெதம்பூர் மற்றும் தோல்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த பயங்கரம் அரங்கேறியுள்ளது. கஜுராஹோ – உதய்பூர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (Khajuraho-Udaipur Intercity Express) ரயிலின் பொதுப் பெட்டியில் இருந்த பயணி ஒருவர் திடீரென அபாயச் சங்கிலியை (Alarm Chain) இழுத்ததால் ரயில் நடுவழியில் நின்றுள்ளது.
அந்தச் சமயத்தில் ரயிலில் தீப்பிடித்துவிட்டதாக யாரோ கிளப்பிவிட்ட வதந்தியால் பதற்றமடைந்த பயணிகள், தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து, பக்கத்தில் இருந்த முக்கியத் தண்டவாளப் பாதையில் சிதறி ஓடியுள்ளனர்.
அப்போது துரதிர்ஷ்டவசமாக எதிர் திசையில் அதிவேகமாக வந்த பிரோஸ்பூர் – சியோனி பாதால் கோட் எக்ஸ்பிரஸ் (Patalkot Express) ரயில், தண்டவாளத்தில் ஓடிய பயணியர் மீது பயங்கரமாக மோதியதில் இந்த கோர மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சராய் சோலா காவல் நிலையப் பொறுப்பாளர் கே.கே.சிங் தலைமையிலான போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.
வதந்தியால் 4 உயிர்கள் பறிபோன இந்த விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வரும் இந்த சோகமான செய்தி தற்பொழுது சோசியல் மீடியாவில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
