தெலங்கானா மாநிலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவருக்குச் சக மாணவரே கட்டாய மது கொடுத்துப் பாலியல் பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவனை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அதாவது உதய் என்ற வாலிபர், இப்ராகிம் பட்டினத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி, உதய் தன்னுடன் படிக்கும் சக மாணவி ஒருவரைத் தேநீர் அருந்துவதற்காகத் ஒரு காபி ஷாப்பிற்குத் தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து இப்ராகிம் பட்டினத்திற்குத் திரும்பியுள்ளார்.
அப்போது, வழியில் உள்ள ஒரு மதுக்கடையில் மதுபாட்டில்களை வாங்கிய உதய், பி.டி.எல் சாலையில் உள்ள ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு அந்த மாணவியைக் காரில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து மாணவியைக் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துள்ளார். இதில் மாணவிக்கு மதுப்போதை தலைக்கேறியதைப் பயன்படுத்திக் கொண்ட உதய், அவரை ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி உதயைக் கைது செய்துள்ளனர்.
