செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வளர்ச்சி பெற்று வரும் நிலையில் அதனை பயன்படுத்தி டீப்ஃபேக் எனப்படும் போலி வீடியோக்கள் தயார் செய்யப்பட்டு சமூக வலைதளத்தில் பகிரப்படுகின்றன. இதுபோன்று போலியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தயார் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுபவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66-படி மூன்று ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதோடு சமூக வலைதள நிறுவனங்களுக்கு 24 மணி நேரத்தில் இது போன்ற காணொளி மற்றும் புகைப்படங்களை நீக்கிவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் சமூக வலைதள நிறுவனங்களுடன் டீப்ஃபேக் தொடர்பாக கலந்தாலோசிக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை நடைபெற இருக்கும் கூட்டத்தில் பங்கேற்க சமூக வலைதள நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு சம்மன் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் அனுப்பப்பட்டுள்ளது.