2026-ம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நிறைவடைந்த நிலையில், இந்தத் தொடரின் சிறந்த வீரர்களைக் கொண்டு ‘டி20 உலகக்கோப்பை கனவு அணியை’ ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

இந்த வெற்றியின் எதிரொலியாக, ஐசிசி அறிவித்துள்ள உலகக்கோப்பை அணியில் நான்கு இந்திய வீரர்கள் இடம்பிடித்துப் பெருமை சேர்த்துள்ளனர். குறிப்பாக, தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன், அதிரடி பேட்டர் இஷான் கிஷன், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இந்த அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அணியில் தொடக்க வீரராக பாகிஸ்தானின் சாஹிப்சாதா ஃபர்ஹான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பராகவும் மிடில் ஆர்டர் பேட்டராகவும் சஞ்சு சாம்சன் களமிறக்கப்பட்டுள்ளார். இறுதிப்போட்டியில் 89 ரன்கள் விளாசிய சாம்சன் மற்றும் தொடர் முழுவதும் ஆக்ரோஷமாக விளையாடிய இஷான் கிஷன் ஆகியோர் இந்திய பேட்டிங் வரிசையின் பலத்தை பறைசாற்றுகின்றனர்.

இதனால் பந்துவீச்சில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய பும்ரா மற்றும் இக்கட்டான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்திய பாண்டியா ஆகியோர் அணியின் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். ஆச்சரியப்படும் விதமாக, இந்தியாவை சாம்பியன் ஆக்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை மாறாக தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் இந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.