ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் அதிகாலை வேளையில் ஒரு தனியார் பயணியர் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 22 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து ரிஷிகேஷில் இருந்து இந்தூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, ஜெய்ப்பூர்-பண்டிகுய் விரைவுச்சாலை பகுதியில் அதிகாலை சுமார் 3:15 முதல் 3:30 மணியளவில் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்தவுடன் பேருந்திலிருந்து 24 முதல் 25 பயணிகள் அதிர்ஷ்டவசமாகப் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

“>

மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்து நடந்த இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தீயை அணைத்த பிறகு பேருந்தின் உள்ளே இருந்து பலரது கருகிய உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் பேருந்தில் தீப்பிடித்ததற்கான துல்லியமான காரணம் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தௌசா மாவட்ட ஆட்சியர் டாக்டர் சௌமியா ஜா தெரிவித்துள்ளார்.